தமிழ்நாடு

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!
NCW
திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுமி குறிப்பிட்ட இடங்களில் அத்தகைய சம்பவம் நடந்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடுமையான அறிவுறுத்தல்கள்

இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் மனித உரிமை மீறலின் உச்சம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்

இத்தகைய கொடூர குற்றங்களைத் தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் எந்தத் தொய்வும் இருக்கக்கூடாது என்றும் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.