கழுத்துலேயே அவனை போடுறோம்டா' என்று சொல்லிப் பழகிய ஒரு தாதா, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்யா' என்று சொன்னதை நம்ப முடிகிறதா? கூலிப்படைகளை வைத்து ரத்தம் தெறிக்கத் தெறிக்க நாட்களை நகர்த்திய அந்த ரவுடி திருந்தி, அப்பம் மற்றும் ஒயினுடன் ஊழியக்கூட்டம் நடத்தியதை ஜீரணிக்க முடிகிறதா? ஆனா, அருவா சத்தியமாக அத்தனையும் உண்மை!
சென்னையை சிதறவிட்ட ரவுடிகளை ஆளுயர வரிசையில் நிறுத்தினால் கடைசி ஆளாக நிற்பார் செல்வம், உயரம் ஒண்ணும் அதிகம் இல்லைதான். ஆனா, போடுறப்ப பொருளைப் பிடிச்சு இறக்குறதுல அண்ணன் செம்ம வெயிட்டு, வடசென்னையில சிம்பிளா 'செல்வம்'ன்னு சொன்னா யாருக்கும் தெரியாது. ஆனா 'மாலைக்கண் செல்வம்'ன்னு சொன்னாப் போதும் 'இன்னாபா வூட்டாண்ட சொல்ட்டு வன்ட்டியா?'ன்னு விரைப்பா கேப்பாங்க. மாதவரம், காசிமேடு, ராயபுரம்னு நார்த் மெட்ராஸ் முழுக்க கொடி கட்டிப் பறந்தவர் அண்ணன்." என்கிறார்கள் மாலைக்கண் செல்வத்தின் விழுதுகள்!
மாலைக்கண் செல்வத்தின் ரணகள வரலாற்றை அந்தக் காலத்தில் அவரது டீமில் ஒருவராக வலம் வந்த மெரீனா ஸ்ரீதரை சந்தித்துக் கேட்டோம். அதெல்லாம் ஒரு காலம்ப்பா, நார்த் மெட்ராஸ் முழுக்க எங்க டீம் பேரைச் சொன்னாலே அலறும். ஆக்சுவலா நானெல்லாம் வயசுல செல்வத்தைவிட பெரியவன். ஆனா, அவனோட தொழில் நேர்த்தி, பொருளை இறக்குற ஸ்டைலு, கூட்டாளிங்களை மதிக்கிற குணம் இதெல்லாம் பார்த்துட்டு அவனை குருவாவே ஏத்துக்கினேன்.
நான் தொழில் கத்துகினது அயோத்தியாகுப்பம் வீரமணி டீம்லதான். சவுத் மெட்ராஸ்ல சதுராடிட்டு அப்பால நார்த்ல நம்ம செல்வம் கைல வந்து சேர்ந்துட்டேன். செல்வத்தோட சொந்த ஏரியா மாதவரம்னு சொல்வாங்கோ. அப்புறம் காசிமேடுன்னு சொல்வாங்கோ. பெர்சா படிக்கல, ஆனா ஷார்ப்பான ஆளு. ஒரு கண்ணு அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். வித்தியாசமா பார்ப்பான். அதனால செல்வத்தோட பேரு போலீஸ் ஏரியாவாண்ட மாலைக்கண் செல்வம்'னு ஆயிடுச்சு. எதைச் சொல்லிக் கொடுத்தாலும் உடனே சுத்துக்குவாப்ல. சவுத் மெட்ராஸ்ல வீரமணி ஆடினு தலையெடுத்து இருந்தாலுமேகூட நார்த்ல அப்ப அவருக்கு சமமான ஆள் யாருமே இல்லாத நிலைமை. செல்வம் சுயமான ஒரு தாதாவா வளர ஆரம்பிச்சான். வயித்துப் பொயப்புக்காக பொருள எடுத்தவன்தான். ஆனா அப்புறம் மளமளன்னு பெர்சா ரவுடியாகி நின்னுட்டான். சும்மா பொருள எடுத்துனு மிரட்டல் ஃபிலிமு காட்டுவான்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா அவனோ வேற வெளாட்டு காட்னான்.
முதல்ல எல்லாம் சென்னையில பெருசா கொலைகளும் கிடையாது. சும்மா சரக்கு ஏத்தினு, கட்டப்பஞ் சாயத்து பண்ணிகினு. உதார் வுட்னு, வசூலு பிக்பாக்கெட்னு திரிவோம். ஆனா மெல்ல கோஷ்டிங்கோ அங்கேயிங்கே உருவானதுல மெதுவா மோதல் உருவாகி அப்பாலிக்கா ஒரு டீமை இன்னொரு மேட்டரயே முடிக்கிற கொலை சம்பவங்களும் நடக்க ஆரம்பிச்சுது. 87ம் வருஷ வாக்குல குப்பன்சாலை ஜங்ஷனாண்ட பாஸ்கர்ங்கிறவனை ஒரு டீம் போட்டுச்சு. அவனை வட்டத்தியான் பாஸ்கர்னோ, வடக்கத்தியான் பாஸ்கர்னோ சொல்லுவாங்க. அவனை போட்ட சம்பவம்தான் மெட்ராஸ்ல முக்கியமான ரவுடியிஸ கொலைன்னு அப்ப போலீஸ் டென்ஷன் காட்டுச்சு.
அப்றம் நார்த் மெட்ராஸ்ல எங்கே கொலைன்னாலும் மாலைக்கண் செல்வத்தைதான் முதல்ல ரவுண்டு சுட்டத் துவங்குச்சு போலீஸ். சம்பவங்களுக்குப் பிறகு கடற்கரையாண்ட குடிச, ஸ்டீமர் போட்னு எதுக்குள்ளேயாச்சும் நாள்கணக்கா ஒளிஞ்சு கிடப்பான் செல்வம். முதல்ல அவனை ஈஸியா போலீஸாண்ட மக்கள் போட்டுக் கொடுத்துடுவாங்க. ஆனா காலம் போகப் போசு செல்வத்தோட ஹெல்பிங் மனசை புரிஞ்சுகினு அவனை தலீவனாவே ஏத்துகினாங்க. சம்பவம் பண்ணி எவ்ளோ பணம் வந்திருந்தாலும் ஏரியாவுல உதவின்னு வந்து நிக்குறவங்களுக்கு பிரிச்சு கொடுத்துடுவான். கோயிலு, சர்ச்சு, மசூதின்னு அவன் பண்ணாத செலவே கிடையாது. இதுக்குப் பிறகு நார்த் மெட்ராஸ்ல எல்லா ஏரியாவுலேயும் மக்களே அவனுக்கு கேடயமாட்டமா நின்னு போலீஸ்ட்ட இருந்து எஸ்கேப் பண்ணிவுட்டாங்க.
ஆனா ஒரு கட்டத்துல போலீஸ் செல்வத்த வெறியா தேடத் துவங்குச்சு. காரணம் சென்னையில அப்ப ரெண்டு மூணு குரூர கொலைகள் நடந்துச்சு. யாராச்சும் ஸ்கெட்ச் போட்டு கொடுக்குற ஆளுங்களை கூலி வாங்கினு கடலுக்கு கடத்திட்டுப் போயி கத்திய சொருகி கொன்னுட்டு அப்டியே உடம்புல கல்லைக் கட்டி நடுக்கடல்ல இறக்குறது. ஆள அடிச்சு கோணியில நுழைச்சு, பாறாங்கல்லை கட்டி உசுரோட கடலுக்குள்ளே இறக்கி கொல்றதுன்னு பெர்சா சம்பவங்களாகிப் போச்சு.
இதெல்லாம் பண்ணது செல்வம் டீம்தான். இப்படி ட்ரிக்கை உருவாக்குறதே செல்வம்தான்னு போலீஸ் பரபரப்பா பேசுனாங்க செல்வம் அதை வலுவா மறுத்தாலும் போலீஸ் ஏத்துக்கல. இது மூலமா போலீஸாண்ட செல்வம் பேரு ரொம்ப மோசமான கிரிமினல்னு டேமேஜ் ஆனாலும்கூட ஏரியாவுல இன்னும் பெரிய தாதாவா எஸ்டாபிளிஸ் ஆனான்.
அப்ப இருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு ஆல்பார்ட்டிக்கும் அவன்தான் முக்கிய அடியாளா நின்னான். அரசியல் நட்பும், அரசியல்வாதிங்கோ கொடுத்த அட்ராசிட்டி வேலைகளும் அவனை ரொம்பவே பெரிய தாதாவா செல்வம் சம்பவங்கள மாத்துச்சு. நார்த் மெட்ராஸ்ல பண்ணினு இருக்குறப்பவே சவுத் மெட்ராஸ்ல அயோத்தியா குப்பம் வீரமணி ஆட்டம் காட்னு இருந்தாப்ல. இவங்க ரெண்டு பேரையும் மோதவிட்டு ஒருத்தர் கையால இன்னொருத்தரை முடிக்க வைக்க உளவு போலீஸ் ட்ரிக் பண்ணுச்சு. முதல்ல இது புரியாம ரெண்டு கேங்கும் மோதிக்கினாங்க. 'ரவுடிங்களுக்குள்ளே ரத்த வெறியாட்டம்'ன்னு பேப்பர்ல நியூஸ் வந்ததும் ரெண்டு பேரும் உக்காந்து யோசிச்சாங்க. அப்புறம் வீரமணியும், செல்வமும் கைகொடுத்துகினு சமாதானமா போயிட்டாங்க. அப்பல்லாம் நாங்கோ வீரமணியை 'பெரியவர்'ன்னும். மாலைக்கண் செல்வத்த 'சின்னவர்'னும் சொல்வோம்.
துவக்க காலத்துல இருந்து மிடில் வரைக்கும் செல்வம் தன்னை வேகமான ரவுடியா காட்டிகினான். எப்பவுமே
பொருளு சுத்தி ஆளுங்கன்னு டெரர் காட்டுவான். ஆனா ஒரு கட்டத்துக்கு மேலே செல்வம் தன் இமேஜை வேறமாதிரி மாத்திகினான். நார்த் மெட்ராஸ்ல ஒரு தலீவனா உருவெடுத்ததால, கூலி வாங்கிட்டு மேட்டரை பண்ணுனாலும் சத்தமில்லாம பண்ணிடுவான்.
பல சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் மட்டும் போட்டுக் கொடுத்துட்டு ஒதுங்கி நின்னு பார்த்துப்பான். அவன் சம்பவம் பண்ணி முட்சதும் அவனுக்காக சரண்டராகுறதுக்குன்னு ஒரு டீம் இருந்துச்சு. போலீஸ் தலைகீழா நின்னு பார்த்தும் நாலு கொலைங்களுக்கு மேலே செல்வத்தோட பேரை கொண்டு வர முடியல. ஆனா மொத்தமா ஆட்கடத்தல், கொல முயற்சி, வெட்டு குத்துன்னு பதினெட்டு வழக்குகள் வரைக்கும் உண்டு.
என்னதான் வெட்டு, ரத்தம்னு தொழில் பண்ணாலும் செல்வத்துக்குனு சில தர்மம் வெச்சிருந்தான். கட்சிக்காரங்களும், சேட்டான் ஆளுங்க சிலரும் அவனை வெச்சு அப்பாவிங்கள தட்டி முடிக்கப் பார்த்தாக்க ஏத்துக்க மாட்டான். பிசினஸுக்கு, கட்சிக்கு எவனாச்சும் தொந்துருவு கொட்த்தாக்க காசு வாங்கிட்டு அவன தட்டுவான், ஆனா தேவையில்லாம பப்ளிக்க தொந்துருவு பண்ணமாட்டான் செல்வம்.
ஆனா பெரியவரு வீரமணி அப்டியில்லாம ஓவரா ஆடிட்டாப்ல. அதான் அவரை என்கவுன்ட்டர்ல போட்டுத் தளட்டாங்க. வீரமணிக்கு அப்புறம் யார் யார்? ரவுடிங்கோனு லிஸ்ட் எடுக்கச்சொல்லோ நம்மாளு செல்வம் பேருதான் மொதல்ல இருந்துச்சு. அப்புறம்தான் ராஜேந்திரன், சேரா, நாகேந்திரன், காதுகுத்து ரவி, காட்டான் சுப்பிரமணியன், சூப் கடை பாண்டி, சுறுப்பு பாலுன்னு லிஸ்ட் போச்சு.
லிஸ்ட் போட்ட போலீஸ்காரங்க முதல்ல செல்வத்தை என்கவுன்ட்டர்ல போட முடிவு பண்ணுன விஷயம் அவன் காதுக்குப் போச்சு. சில நாள் தீவிரமா யோசிச்சவன் சட்டுன்னு முடிவு பண்ணிட்டு சென்னை போலீஸ் கமிஷனர்ட்ட 'நான் திருந்தி வாழ ஆசப்படுறேன்'ன்னு போய் நின்னான். கமிஷனர் நாஞ்சில் குமரன், 'என்ன என்கவுன்ட்டருக்கு பயந்து நடிக்கிறியா?'ன்னு கேட்டார். இவன் மறுத்து, தன்னோட மனசு மாறிப்போச்சு! மத்த மனுஷங்களுக்கு நல்லதா இனி இருக்கணும்னு சொன்னான். உடனே பக்சுத்துல நின்ன போலீஸ் அதிகாரி ஜாங்கிட் 'நாலு கொல பண்ணியிருக்கான், பல கேஸும் இருக்குதுன்னு சொன்னார்.
ஆனாலும் கமிஷனர், 'திருந்துறதுக்கு இது உனக்கு லாஸ்ட் சான்ஸ்ன்னு சொல்லிட்டு அவனை ரிமாண்ட் பண்ணச் சொல்ட்டார். ஜெயில்ல சில வருஷம் இருந்துட்டு வெளில வந்தான். பொருளு, போடுறதுன்னு எல்லாத்தையும் விட்டுட்டு திருந்தி வாழணும்னு நின்னான். ஆனாலும் பழைய கேஸ்ல ஒரு வருஷத்துலேயே மீண்டும் ஜெயில். அப்ப அவனை சர்க்கரை நோய் பிடிச்சு ஆட்டிடுச்சு. கொஞ்சம் குட்டையா இருந்தாலும் கும்முன்னு இருந்த மாலைக்கண் செல்வம் இந்த சர்க்கர நோயால துரும்பாயிட்டான்பா.
ஒருவழியா ஜெயில்ல இருந்து வெளில வந்தவன் கிறிஸ்டீன் ஆயிட்டான். கையில பைபிள் எடுத்துனு, டவுன் பஸ் ஏறி ஏரியா ஏரியாவா போயி பிரேயர் நடத்த ஆரம்பிச்சான். எங்களுக்கு ஷாக்காகிப் போச்சு. 'செல்வம் தனியா போகாதபா, பழைய பகையில எவனும் பொருள எடுத்து போட்ருவான்பா'ன்னு சொல்லுவோம் அதுக்கு 'கர்த்தர் காப்பாத்துவார். கர்த்தருக்கு ஸ்தோத்திரமய்யா'ன்னு கும்பிடுவான்.
அப்டியே கொஞ்ச நாள்ள நோயாலேயே சாய்ஞ்சு அவன் கதை முடிஞ்சுது. நார்த் மெட்ராஸ், ஹார்பனு பெரியா பெரியா விஷயங்களை அடகி ஆண்ட ஒருத்தன் திருந்தி, வாழ்ந்தான்னா அது நம்ம மாலைக்கண் செல்வம்தான்பா.
பாதிரியாராட்டமா அவனோட ரவுடி கேரக்டர்லதான் தனுஷோட 'பொல்லாதவன்' படத்துல கிஷோரை நடிக்க வெச்சாரு வெற்றிமாறன். 'வடசென்னை' படத்துல வர்ற கேரம் விளையாட்டுல்லாம் எங்க வாழ்க்கையில இர்ந்து எடுத்ததுதான்பா. மாலைக்கண் செல்வம் என்னாமா கேரம் ஆடுவான் தெரியுமா? ச்சும்மா சர்ரு சர்ருன்னு காயின் போட்டுனே இருப்பான். அவன் ஸ்டிரைக்கர் சுண்டுறப்பல்லாம் அவன் பொருளை எடுத்து இறக்குறதும், காயின் விழுறதெல்லாம் ஆளுங்க அவுட்டாகுறதுமா எங்களுக்கு தோணும். இத்த சொல்லி சிரிக்கச்சொல்லோ "ஏம்பா பொழுதன்னிக்கும் உங்களுக்கு கவுச்சி நெனப்புதானா?"ன்னு திட்டுவான்பா செல்வம். அவுன மாதிரி ஒரு தாதாவை போலீஸ் மட்டுமில்லட ரவுடிங்ளே பாத்ருக்க மாட்டாங்க” என்றபடி லுங்கியை ஏற்றிக் கட்டினார் பெருசு.
(ரத்தம் தெறிக்கும்) - எஸ் . ஷக்தி .
LIVE 24 X 7









