தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!
PET Period

தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான திருத்திய புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் இணையதளக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தினந்தோறும் விளையாட்டு வகுப்புகள்

மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகளும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 2 உடற்கல்வி வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள இரு நாட்களில் கலை மற்றும் இதர செயல்பாடுகளுக்கான (Extra-curricular activities) வகுப்புகள் ஒதுக்கப்படும். தேவைப்பட்டால் இவற்றையும் உடற்கல்வி வகுப்புகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் மாணவர்கள் தினமும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

பாடவேளை மற்றும் நேர மாற்றம்

புதிய அட்டவணையின்படி, பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களுக்கு வாரத்தில் 4 பாடவேளைகளும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்குக் கூடுதலாக ஒரு பாடவேளையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பாடவேளை 90 நிமிடங்களாகவும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம்

விளையாட்டு வகுப்புகளை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளிகளில் சாதி, மதம், நிறம் என எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து மாணவர்களையும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு மைதானங்களில் இருந்து ஒலிம்பிக் பதக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் பயிற்சிகள் வழங்கி மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.