தமிழ்நாடு

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !
CM Vijay in Andhra : Temple Visit to Political Meeting !

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ஆந்திரப் பிரதேசம் சென்றடைந்தார். விஜயவாடா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கனக துர்கை அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர், சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார்.

விஜயவாடா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக விஜய் இன்று ஆந்திரா சென்றுள்ளார். இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து மதியம் 2.30 மணியளவில் காரில் புறப்பட்ட அவர், சென்னை விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் விஜயவாடாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

பிற்பகல் 3.45 மணியளவில் விஜயவாடா விமான நிலையத்தைச் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண்பதற்காக விமான நிலையத்தின் அருகே ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கனக துர்கை அம்மன் கோவிலுக்குப் புறப்பட்டார்.

கனக துர்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஜயவாடாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனக துர்கை அம்மன் கோவிலுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டார். மாலை 4.55 மணியளவில் கோவிலுக்குச் சென்ற அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

வழிபாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்க்கு கனக துர்கை அம்மன் மற்றும் மல்லேஸ்வர சுவாமியின் புகைப்படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்ட அவர், அடுத்தகட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கிருந்து புறப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவுடன் இன்று சந்திப்பு

கனக துர்கை அம்மன் கோவிலில் வழிபாட்டை முடித்துக்கொண்ட முதலமைச்சர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்குப் புறப்பட்டுள்ளார். திட்டமிட்டபடி மாலை 6 மணியளவில் அவரது இல்லத்தைச் சென்றடையும் விஜய், அங்கு சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடுவது தொடர்பான விவகாரங்கள் குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நீர்வளத் தேவைகள் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பங்கீடு தொடர்பான விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்சவ் மைதான நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய்

சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, இரவு 7.10 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து முதலமைச்சர் விஜய் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், விஜயவாடாவில் உள்ள உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த ஆந்திரப் பயணத்தில், கோவில் வழிபாடு, இரு மாநில முதலமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சி எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.