தமிழ்நாடு

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !

வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !
Vetri Payanam Scheme: Court Case Withdrawn !

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் :

முன்னதாக நடைமுறையில் இருந்த பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது. மேலும், மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் பல்வேறு வகை அரசு பேருந்துகளிலும், குறிப்பிட்ட புறநகர் மற்றும் மலைப்பகுதி சேவைகளிலும் இந்த இலவச பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கு :

இந்த திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களின் வருவாய் பாதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இழப்பு ஏற்பட்டால் பேருந்து தொழிலை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்றும் கூறி, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிக்காமல் பயணிக்க அனுமதிப்பதால், தனியார் பேருந்துகளுடன் போட்டியிடும் சூழலில் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அரசு பேருந்துகளில் இத்திட்டத்துக்காக அரசு ஏற்கும் செலவினத்தைப் போல, தனியார் பேருந்துகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அரசாணை தொடர்பாகவும் கேள்வி :

‘வெற்றிப் பயணம்’ திட்டம் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டாலும், இதற்கான தனி அரசாணை பிறப்பிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் அடிப்படையில், திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், திட்டத்தை சட்டரீதியாக பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி :

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

மேலும், மனுதாரர் ஈரோட்டில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து அவர் எவ்வாறு வழக்கு தொடர முடியும் என்பது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கை வாபஸ் பெற்ற மனுதாரர் :

விசாரணையின்போது நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து, வழக்கைத் தொடர விரும்பவில்லை என்றும், மனுவை வாபஸ் பெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.