தமிழ்நாடு

NDA-வுக்கு ஜான் பாண்டியன் ஷாக்... பாஜக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

NDA-வுக்கு ஜான் பாண்டியன் ஷாக்... பாஜக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்!
இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜான் பாண்டியன் பேசியதாவது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு முழுமையாக வெளியேறுகிறோம்.

இனிமேல் எங்களது கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் நீடிக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.நாங்கள் கூட்டணியிலிருந்து விலகும் இந்த முடிவை, இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாகவே டெல்லி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுவைக் கூட்டி, அதில் விரிவாக விவாதித்து முறைப்படி முடிவு செய்து அறிவிப்போம்.

தேர்தல் காலகட்டங்களில் யாருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதை நிர்வாகிகளோடும், தொண்டர்களோடும் ஆலோசித்து அதன் பின்னரே எங்களது இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம்" என்று கூறினார்.