தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து.. சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்!

டெல்லியில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து.. சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்!
CM Vijay
டெல்லியில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டு இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகப் நேற்று டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு, தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், மேகதாது அணை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் மற்றும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து மனு அளித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.

இன்றைய இரண்டாம் நாள் பயணத்தின் போது, டெல்லி திரும்பும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்டது. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் வெளியே விஜய்யை வரவேற்றுப் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தச் சந்திப்புகள் ஏதுமின்றி இன்று காலை 10 மணியளவில் அவர் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று பிற்பகல் சென்னை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தால், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பதை மரபாக வைத்திருந்தனர். இந்த மரபின்படி முதல்வர் விஜய்யும் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எவ்விதச் செய்தியாளர் சந்திப்பும் நடத்தாமல் டெல்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.