தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் வெளிநபர்களுக்கு கட்டுப்பாடு - அமைச்சர் ராஜ்மோகன் புதிய உத்தரவு..!

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் வெளிநபர்களுக்கு கட்டுப்பாடு - அமைச்சர் ராஜ்மோகன் புதிய உத்தரவு..!
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல; அரசியல் மேடைகளும் அல்ல. அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பண்ணைகளாக அவை திகழ வேண்டும்” என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அரசு சார்பில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, எந்த அரசியல் கட்சியினருக்கும் அல்லது தனியார் அமைப்பினருக்கும் மாணவர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதி வழங்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவர்களைச் சந்திப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல் நேரம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரம் என்பதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத சூழலை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடைபெறும் இடமாக அல்லாமல், அறிவு, சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி மையங்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான நெறிமுறைகள் விரைவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.