20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளைப் பாராட்டும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். இதில் தடகள வீராங்கனை வித்யா ராமராஜூக்கு ரூ.1.55 கோடிக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், துடுப்புப் படகுப் போட்டியில் சாதித்த கமலினி மற்றும் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு தலா ரூ.75 லட்சமும், விளையாட்டு வீரர் விஷாலுக்கு ரூ.80 லட்சமும் வழங்கிப் பாராட்டப்பட்டது.
ஸ்குவாஷ் போட்டியில் பதக்கங்களைக் கைப்பற்றிய முன்னணி வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் ஆகியோருக்கு தலா ரூ.60 லட்சம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இதேபோல், தடகளம் உள்ளிட்ட பிரிவுகளில் சாதித்த பரணிகா இளங்கோவன், அபிநயா, ராஜேந்திரன், ராஜேஷ் ரமேஷ் மற்றும் சமீனா ரியார் ஆகியோருக்குத் தலா ரூ.30 லட்சமும், ஹரிஹரன், ஹம்ச குரானன் மற்றும் படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணன் ஆகியோருக்குத் தலா ரூ.30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அதேபோல், ஸ்ரீநாத் நாராயணன், வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
இவற்றுடன், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திய கஸ்தூரி ராஜாமணி மற்றும் சோலைராஜ் தர்மராஜ் ஆகியோருக்குத் தலா ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
LIVE 24 X 7









