தமிழ்நாடு

கூட்டுறவு BANK-ல நகைக் கடன் வாங்க போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு BANK-ல நகைக் கடன் வாங்க போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்!
Cooperative bank

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை கூட்டுறவுத்துறை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நகைக் கடன்களுக்கான பெறக்கூடிய தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன், வட்டி விகித சீரமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது ஒரு கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை நகைக் கடனாக வழங்கப்பட்டு வந்தது. மேலும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கிட்டு 75 சதவீதம் வரை கடன் வழங்கி வந்தனர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவின்படி, நகைக் கடன்களுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டு, தங்க நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது ஒரு கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் (DCCB) சொந்தக் கிளைகள் வழங்கும் நகைக் கடன்களுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் இடையே வட்டி விகிதத்தில் வேறுபாடுகள் இருந்தன. இதனைச் சரி செய்யும் விதமாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, PACCS சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதமானது, மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். அதேசமயம், PACCS சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கூட்டுறவுத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்த்தப்பட்ட நகைக் கடன் அளவானது, இனி புதிதாகப் பெறப்படும் நகைக் கடன்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.