தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடியவர்களில் 4 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட சிறையில் உள்ள ஒரு அறையில் விழுப்புரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று இரவு 11 மணியளவில், கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சத்தம் எழுப்பியுள்ளனர். இதை நம்பிச் சிறைக் காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட இருவர் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த கைதிகள் திடீரென அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் தங்கப்பாண்டி மற்றும் லேசான காயமடைந்த மற்றொரு காவலர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். சிறையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. தப்பிய கைதிகள் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்டக் காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், நேற்றிரவு பிரவீன் என்ற கைதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை காட்டில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர் ஆகிய 3 கைதிகளையும் தனிப்படை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி 17 கைதிகள் தப்பியோடிய இந்தச் சம்பவம், சிறை மற்றும் காவலர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
LIVE 24 X 7









