விளையாட்டு

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.. சேப்பாக்கத்தில் நாளை 'CSK vs GT' மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.. சேப்பாக்கத்தில் நாளை 'CSK vs GT' மோதல்!
CSK vs GT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 26) நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகள் ஒருபுறம் ஓய்ந்துள்ள நிலையில், நாளை மாலை 3:30 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மாபெரும் வெற்றியுடன் நல்ல ஃபார்மில் இருக்கும் சென்னை அணி, சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் கொண்டிருக்கும் குஜராத் அணி, பெங்களூருவிடம் இழந்த வெற்றியைச் சென்னையில் மீட்டெடுக்கக் காத்திருக்கிறது.

சஞ்சு சாம்சன் அதிரடியும் - சாய் சுதர்சன் சவாலும்

சென்னை அணியைப் பொறுத்தவரை, கடந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். பந்துவீச்சில் அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது ஜோடி சேப்பாக்கம் ஆடுகளத்தில் எதிரணியைச் திணறடிக்கத் தயாராக உள்ளது. அதே சமயம், குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சமீபத்தில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் சென்னை பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாகத் திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் ஆட்டமும் பிட்ச் நிலவரமும்

நாளை பிற்பகல் 3:30 மணிக்கு ஆட்டம் தொடங்குவதால், சென்னையின் கோடை வெயில் இரு அணி வீரர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும். சமீபகாலமாகச் சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறிவிட்டாலும், நாளை மதிய நேர ஆட்டம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பிட்ச் சற்று ஒத்துழைக்க வாய்ப்புள்ளது. புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் சென்னையும், 7-வது இடத்தில் இருக்கும் குஜராத்தும் பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.