விளையாட்டு

குவாலிஃபயர் 2: குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

குவாலிஃபயர் 2: குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்?
GT vs RR
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று (மே 29) பலப்பரீட்சை நடத்துகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணி 'குவாலிஃபயர் 1' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் தோல்வியடைந்து, இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் முதல் வாய்ப்பை இழந்தது. தற்போது இரண்டாவது வாய்ப்பாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இந்த குவாலிஃபயர் 2 ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

குஜராத் அணியின் பலமும் சவாலும்

பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் சோபிக்கத் தவறியதே அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் இந்த முக்கிய ஆட்டத்தில் அவர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் தெவாதியா இந்த ஆட்டத்திலும் பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன் முகமது சிராஜ் மற்றும் ரஷீத் கான் ஆகியோரும் ராஜஸ்தான் பேட்டர்களுக்கு சவால் அளிக்க ஆயத்தமாக உள்ளனர்.

முன்னேறத் துடிக்கும் ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். அவரது வழக்கமான அதிரடி ஆட்டம் இந்த போட்டியிலும் தொடரும் பட்சத்தில் அது அணிக்குப் பெரும் பலமாக அமையும். அவருடன் துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரியான் பராக் மற்றும் டோனோவன் ஃபெரெய்ரா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் ராஜஸ்தான் அணி பலமான சவாலை அளிக்கும். பந்துவீச்சில் ஆர்ச்சர், நாண்ட்ரே பர்கர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷ்ராஜ் பஞ்சா ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.