விளையாட்டு

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து; கத்தாரை துவம்சம் செய்த கனடா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவு லீக் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் பிரம்மாண்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து; கத்தாரை துவம்சம் செய்த கனடா!
FIFA
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவு லீக் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் பிரம்மாண்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற குரூப்-பி லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போஸ்னியா அணிகள் மோதின. விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் முதல் பாதி 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்தின் அதிரடி

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆக்ரோஷமான ஆட்ட வெளிப்பாட்டை நோக்கி நகர்ந்தது. 74-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி முதல் கோலை அடிக்க, 84-வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து 90-வது நிமிடத்தில் மன்சாம்பி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதற்கிடையே போஸ்னியா வீரர் எர்மின் மஹ்மிக் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கேப்டன் கிரானிட் ஷக்கா கோலாக மாற்ற, சுவிட்சர்லாந்து 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கத்தாரைச் சுருட்டிய கனடா

இதே பிரிவில் வேன்கவரில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் கத்தார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கனடா அணியில், 16-வது நிமிடத்தில் கைல் லாரின் முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஜொனாதன் டேவிட் 29 மற்றும் 45-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடிக்க, முதல் பாதியிலேயே கனடா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 64-வது நிமிடத்தில் நேதன் சலிபா ஒரு கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் துரதிர்ஷ்டவசமாக 'ஓன் கோல்' (Own Goal) அடிக்க, கனடா 5-0 என அசுர வேகத்தில் முன்னேறியது. ஆட்டத்தின் இறுதிப்பகுதியில் ஜொனாதன் டேவிட் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்ய, ஆட்டநேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை முழுமையாகத் துவம்சம் செய்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.