அரசியல்

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


DMK
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போதைய தவெக அரசை விமர்சித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், பழனி கோவிலுக்குச் சொந்தமான 1.41 ஏக்கர் கார் பார்க்கிங் நிலம் தனி நபர்கள் இருவர் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். "திமுக ஆட்சிக் காலத்தில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட நிலம் இது. பழனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் விடுமுறையில் இருந்த நேரத்தில், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளை வரவழைத்து இந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அறியாமையின் காரணமாக இந்தத் தவறு நடந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது என்றும், குற்றவாளிகளையும் தனி நபர்களையும் காப்பாற்றும் உள்நோக்கத்துடனேயே அமைச்சர் இவ்வாறு பேசுவதாகவும் பரந்தாமன் சாடினார்.

இந்த விவகாரத்தில் தவெக அரசைச் சாடிய பரந்தாமன், "கடந்த திமுக ஆட்சியில் பழனி கோவில் நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போது பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சியாகத் தவெக ஆட்சி செயல்பட்டு வருகிறது. பினாமி பெயர்களில் நிலம் மாற்றப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏன் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக திமுக ஆட்சிக்காலத்தில் மேடைகளில் 'சி.எம். சார்' என்று பேசிய விஜய், இப்போது முதலமைச்சரான பிறகு இந்த விவகாரத்தில் ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்றும் அவர் வினவினார். ரூ.15 லட்சம் சொத்து கூட வாங்க முடியாதவர்கள், எப்படி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்க முடியும் என்றும், இதில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

லஞ்சம் தொடர்பாகப் புகார் அளிக்கத் தவெக அரசு புதிய புகார் எண்ணை அறிவித்திருப்பது வெறும் போலி பிம்பம் என்று விமர்சித்த பரந்தாமன், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) ஏற்கனவே இதற்கான பிரத்யேக எண்களுடன் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி குறித்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் தரக்குறைவாகப் பேசுவது சரியல்ல என்றும், தவெக அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த நில மோசடி விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், திமுக சார்பில் நீதிமன்றத்தை நாட நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.