அரசியல்

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்நிலைக் குழுவுடன் திருமாவளவன் நாளை ஆலோசனை!

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்நிலைக் குழுவுடன் திருமாவளவன் நாளை ஆலோசனை!
Thirumavalavan
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைத் திரட்டி வரும் நிலையில், அக்கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக-விற்கு வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள 6 இடங்களுக்காக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.

திருமாவளவனின் முக்கிய முடிவு

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தவெக தரப்பிலிருந்து ஆதரவு கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா அல்லது தற்போதைய கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவெடுக்க விசிக தலைவர் திருமாவளவன் நாளை தனது கட்சியின் உயர்நிலைக் குழுவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

நெருக்கடியில் திமுக கூட்டணி

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தவெக பக்கம் சாய்ந்துள்ள நிலையில், விசிக எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்களைத் தீர்மானிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது. தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் வேளையில், நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.