அரசியல்

"உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.. இதுதான் விவசாயிகளின் நிலைமை- பிரேமலதா விஜயகாந்த்

"தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Premalatha Vijayakant
தமிழகத்தில் பல இடங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு ஏற்படுவதாகவும் இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் பாதிக்கப்படுவது மறுபுறம். உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.