அரசியல்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!
Plot to topple the TVK government
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதான கும்பலுக்குப் பின்னணியில், சிங்கப்பூரில் இருந்து பேசிய மர்ம நபர் யார் என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தங்களது விசாரணையை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் காவலும் சிங்கப்பூர் மர்மமும்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-டியூபர் திருநாவுக்கரசு, செல்வன், சீனிவாசன், ராஜேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திருவல்லிக்கேணி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட உள்ள சூழலில், கைதானவர்களில் ஒருவரது கைபேசிக்குச் சிங்கப்பூரில் இருந்து அழைப்பு வந்தது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பேசிய அந்த மர்ம நபர் யார், எதற்காகப் பேசினார் மற்றும் இந்த ஆட்சி கவிழ்ப்புப் பேரத்தின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்துப் போலீசார் விசாரிக்கவுள்ளனர். இந்த போலீஸ் காவலுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் பல அதிரடி மற்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.