சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், முந்தைய திமுக அரசு அவரைத் தப்பிக்க விட்டதாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதேபோல, தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் திமுகவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் திமுகவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் திமுக மீது அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும், ரூ. 1.01 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மேலும், புகார் வந்த மறுநாளே வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எவ்விதத் தாமதமுமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தனிநபர்களாகவே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வீரமணி வழக்கில் திமுகவை இணைத்துப் பேசிய அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர திமுகவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









