தற்போதைய அரசு ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிவரும் நிலையில், அதனையும் மீறி தேர்தல் வந்தால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கூடுதலாக 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், வைகோவின் நெருக்கமானவருமான கள்ளத்தியான் இல்லத் திருமண விழாவில் வைகோ கலந்துகொண்டார். மணமக்கள் பட்டாபிராம் - நித்யஸ்ரீ ஆகியோரின் திருமணத்தை அவர் முன்நின்று நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின்போது நகை, பட்டு ஆபரணங்கள் அணிந்ததாகக் குற்றம்சாட்டியவர்கள், தற்போது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கிரீஸ் நாட்டில் நடத்திய திருமணம் குறித்து யாரும் விமர்சிக்க முன்வரவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், லஞ்சம் வாங்கிப் பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பணம் வருவது நின்றுவிட்டதாகவும், அதனால் இந்த அரசை ஒழிக்க வேண்டும் என அதிகார வர்க்கம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய வைகோ, இந்த ஆட்சி ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதைச் சுட்டிக்காட்டி, வரப்போகும் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹலோ Mr. Chief Minister, தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெறுவார். அவருக்கு ஆதரவாகத் தான் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்வேன்" என்று கூறினார். மேலும், எத்தனை பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவற்றை முறியடிக்க மதிமுக துணை நிற்கும் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சிலரின் முட்டாள் தனமான பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
LIVE 24 X 7









