அரசியல்

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்
cpm slams vijay on up bus conductors tender
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ,சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் சுமார் 30,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசுப் போக்குவரத்து கழகங்கள் மக்களின் அன்றாட பயணத் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படையான சேவை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்து வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவது போக்குவரத்துக் கழகங்களின் மிக முக்கியமான கடமையாகும்.

50 ஆண்டுகளாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து முறையான பயிற்சி வழங்கி சிறப்பான சேவையை போக்குவரத்துக் கழகங்கள் செய்து வந்தன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தப் பணியாளர் முறை இட ஒதுக்கீட்டை மறுப்பது, சமூக நீதிக்கு எதிரானது, பாதுகாப்பான பயணத்திற்கு பயன்படாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்று தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

திமுக அரசு காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல், ஒப்பந்தப் பணியாளர்களை 'சால்வாட்' என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது. தவெக அரசு தற்போது “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும். எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்திரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாக பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.