அரசியல்

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!

அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!
ADMK MLAs
தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாகப் பெற்றது. பின்னர் விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் த.வெ.க-வின் பலம் 107 ஆகக் குறைந்தது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் தனித்து 118 இடங்களுடன் வலுவான பெரும்பான்மையைப் பெற விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவின் சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால், அக்கட்சியின் பலம் 47-லிருந்து 41 ஆகக் குறைந்துள்ளது. தற்போது மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் விலகி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வென்றால், த.வெ.க-வின் பலம் 117 ஆக உயரும். அதன் பின் ஒரே ஒரு இடத்தில் வென்றாலும் த.வெ.க கூட்டணிக் கட்சிகளின் தயவின்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த முடியும்.

தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டு விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிறகு அவர்கள் மன்னனிப்பு கடிதம் எழுதி கொடுத்து இபிஎஸ் தலைமையை ஏற்றனர். இதனைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், சில எம்.எல்.ஏ-க்களும் ஏற்கனவே த.வெ.க-வில் இணைந்துவிட்டனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவைத் தடுக்க, எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருந்த தலைவர்களுக்குப் புதிய கட்சிப் பதவிகளை வழங்கினார். இருப்பினும், தற்போதைய தகவல்களின்படி அந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்புகளை நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த ராஜினாமாக்கள் உண்மையாகும் பட்சத்தில், அது த.வெ.க-விற்குத் தனிப்பெரும்பான்மையைக் கொடுப்பதோடு, அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏற்கனவே தவெக குதிரைப்பேரம் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.