இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த CJP போராட்டம்... முதியவரைக் காவு வாங்கிய அதிர்ச்சி சம்பவம்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தி நேற்று போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இப்போராட்டத்தில் 75 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த CJP போராட்டம்... முதியவரைக் காவு வாங்கிய அதிர்ச்சி சம்பவம்!
cjp protest

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 75 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று (அக்.2) மாலை அக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளாவைச் சேர்ந்த 75 வயதான கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை வந்திருந்தார். இவர் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் வந்த நண்பரும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் உடனடியாக அவருக்கு உதவியுள்ளனர்.

போராட்டக் களத்தில் இருந்த மருத்துவர் ஒருவரும் அவருக்கு முதலுதவி அளித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிவாஜி பூங்கா பகுதியில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.