இந்தியா

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!
CM Vijay and President Droupadi Murmu
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு மூன்று நாட்கள் தங்கிப் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பயணத்தின் முதல் நாளான இன்று மாலை 4:00 மணியளவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் அவர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இன்று மாலை 6:30 மணியளவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 27-ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மீனவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அந்த வரிசையில், டெல்லி பயணத்தின் இரண்டாம் நாளான நாளை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மிக முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் தமிழகத்திற்கான நிதித் தேவைகள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்கக் கோரி அவர் வலியுறுத்தவுள்ளார்.

டெல்லி பயணங்களை முடித்துக்கொண்டு, நாளை மறுநாள் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்குச் சிறப்புச் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.