சினிமா

விஜய் vs ஜேசன் சஞ்சய்.. 'ஜனநாயகன்' ரிலீஸ்.. தள்ளிப்போகும் 'சிக்மா' திரைப்படம்?

'ஜனநாயகன்' படத்தின் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவிருந்த 'சிக்மா' திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் vs ஜேசன் சஞ்சய்.. 'ஜனநாயகன்' ரிலீஸ்.. தள்ளிப்போகும் 'சிக்மா' திரைப்படம்?
JanaNayagan vs Sigma
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீடு, ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் 'சிக்மா' திரைப்படம், முதலில் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, விளம்பரப் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தகவல்களின்படி இப்படம் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதமே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியீடுவதில் கடும் சிக்கல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்திருந்தது சென்சார் போர்டு. இதையடுத்து, ஜூலை 24-ல் ரிலீஸ் என கூறப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவும், நேரடி மோதலைத் தவிர்க்கவும் 'சிக்மா' படக்குழு இந்த முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறது.

ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் வதந்திகளுக்கு ஏற்ப, ரிலீஸ் தேதியை அறிவித்த பிறகு படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் அமைதி காப்பது ரசிகர்களிடையே இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ரிலீஸ் தள்ளிப்போவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.