'இந்தியன் 2' வசூலை பீட் செய்யாத 'தக் லைஃப்'.. முதல் நாள் வசூல்

'இந்தியன் 2' வசூலை பீட் செய்யாத 'தக் லைஃப்'.. முதல் நாள் வசூல்

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: Jayakumar சினிமா
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் உலகம் முழுவதும் (கர்நாடகா தவிர்த்து) நேற்று (ஜூன் 5) வெளியானது.

தமிழிலிருந்து பிரிந்தது தான் கன்னடம் என கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து கர்நாடக நீதிமன்றம் கமல்ஹாசனை, 'நீங்கள் என்ன மொழி அறிஞரா? எனவும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது எனவும் கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கக் கூறியது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெறாத நிலையில், இந்த படம் இன்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகவில்லை.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்தது தான். இந்த படம் கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் ஆகும்.

'தக் லைஃப்' திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் 3000 காட்சிகளுக்கும் மேலும் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் படத்தின் கட்டவுடகளுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், படம் ரசிகர்கள் எதிர்பார்பினை பூர்த்தி செய்ததா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான 'நாயகன்' படத்தை போலவே தக் லைஃப் படமும் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களில் பலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்திய அளவில் ரூ.17 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கமலின் முந்தைய படமாக 'இந்தியன் 2' இந்திய அளவில் முதல் நாளில் ரூ.25.6 கோடி வசூல் செய்திருந்தது. மேலும், சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் முதல் நாளில் ரூ.19.25 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் 'தக் லைஃப்' படம் வெளியாகாத காரணத்தினால் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.