சினிமா

செல்போனால் வந்த வியாதி... சகிலாவிற்கு அறுவை சிகிச்சை!

செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதால் கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார் தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது

செல்போனால் வந்த வியாதி... சகிலாவிற்கு அறுவை சிகிச்சை!
Actress Sakhila get neck injury after over phone usage
செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதால் கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் நடிகை ஷகிலா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய், அஜித், சிலம்பரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியின் மூலம் குடும்ப ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.

இந்த நிலையில், ஷகிலா சமீபத்தில் கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தனது உடல்நலப் பிரச்னைக்கு நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதே முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.

தான் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்றும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளை நீண்ட நேரம் விளையாடுவதாகவும் ஷகிலா தெரிவித்துள்ளார். படுக்கையில் ஒருபுறமாகப் படுத்துக்கொண்டு பல மணி நேரம் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இதுபோன்று செல்போனை பயன்படுத்தியதால் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், முக்கிய ரத்த நாளங்களில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சிகிச்சைக்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் ஷகிலா கூறியுள்ளார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது தனது அன்றாட நடவடிக்கைகளைக்கூட சிரமத்துடன் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சாப்பிடுவது, நடப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக்கூட சில நேரங்களில் மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாக வேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், தனது அனுபவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு குழந்தைகளிடம் செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை வழங்குவதில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஷகிலா அறிவுறுத்தியுள்ளார். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற வீடியோக்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் “செல்போனை அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தேவையில்லாத வீடியோக்களைப் பார்க்க வேண்டாம். இல்லையென்றால் பணத்தை இழப்பதுடன், உடல்நலத்தையும் பாதித்துக்கொண்டு கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும்” என அவர் தனது பாணியில் நகைச்சுவையுடனும் எச்சரிக்கையுடனும் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை குறித்து பேசும்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய ஷகிலா, தனக்கே உரிய பாணியில் சில நகைச்சுவைகளையும் பகிர்ந்துகொண்டார்.

ஷகிலாவின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்த ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர், அவர் விரைவில் முழுமையாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.