சினிமா

"டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.." பிரேக் அப் குறித்து மனம்திறந்த அனுபமா.. யார் அந்த காதலன்?

காதல் முறிவு குறித்து நடிகை அனுபமா பரமேசுவரன் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Anupama Parameswaran
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன அமைதி குறித்தும், தேவையில்லாத சில பாதைகளை விட்டு விலகியிருப்பது குறித்தும் பதிவிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே அவரது காதல் முறிவு குறித்த கேள்விகள் எழுந்தன. இதுவரை மௌனம் காத்து வந்த அனுபமா, தற்போது அளித்துள்ள பேட்டியில் தனது கடந்த கால உறவு குறித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் 'மேரி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் 'கொடி', 'தள்ளி போகாதே', 'பைசன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'பைசன்' படப்பிடிப்பின் போது அவருடன் இணைந்து நடித்த துருவ் விக்ரமுடன் காதல் என்று செய்திகள் பரவினாலும், இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சமீபத்திய பேட்டியில் தனது காதல் முறிவு குறித்துப் பேசிய அனுபமா, தான் வெளியிட்ட பதிவு உடனடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், அதற்குப் பின்னால் 2 ஆண்டுகளாக அனுபவித்த மன மற்றும் உடல் ரீதியான வேதனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தான் அனுபவித்தது சாதாரணக் காதல் பிரச்சனை அல்ல என்றும், 'நார்சிசிஸ்ட் அப்யூஸ்' (Narcissist abuse) எனப்படும் கடுமையான உளவியல் சார்ந்த ஆதிக்கம் மற்றும் துன்புறுத்தல் என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டுவது போல நடந்து கொண்டு, நாளடைவில் தனது சுய விருப்பங்கள் மற்றும் ஆடைத் தேர்வுகள் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார். அன்பு என்ற பெயரில் மெல்ல மெல்லத் தன் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தியதாக அவர் விவரித்தார்.

காதலிக்கத் தொடங்கிய மூன்று மாதங்களிலேயே இரு வீட்டாரும் சந்தித்து நிச்சயதார்த்தம் வரை பேச்சுவார்த்தை சென்றதாகவும், ஆனால் சரியான நேரமில்லை எனக் கூறி தான் தான் அதனைப் பலமுறை தள்ளிப்போட்டதாகவும் அனுபமா தெரிவித்தார். அந்த நபர் ஒரு நாள் மிகுந்த பாசத்துடனும், அடுத்த நாளே சின்ன விஷயத்திற்கு மிரட்டும் வகையிலும் 'அன்னியன்' போல் மாறி மாறி நடந்து கொண்டதால் அவரைப் புரிந்து கொள்ளவே முடியாமல் போனதாகக் கூறினார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நச்சுச் சூழலிலிருந்து வெளிவந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டதாக அனுபமா தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர் குறிப்பிடும் அந்த நபர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகராக இருக்குமோ.. இந்த நடிகராக இருக்குமோ என்று பல்வேறு யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.