2024 ஆம் ஆண்டில் 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழும் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளனர். இது அதற்கு முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு முதல் பேரழிவு தரும் பசியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 1.9 மில்லியனை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலானோர் காசா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்கள் என்பது வேதனை அளிக்கிறது.

போரும்- காலநிலை மாற்றமும்:
கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்வது போர். இரு நாடுகளிடையே நிலவும் போர் சூழ்நிலை பொது மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 நாடுகளில் வாழும் 140 மில்லியன் மக்கள் போரின் சூழ்நிலையினால் பசியில் வாடியுள்ளனர். காசா, தெற்கு சூடான், ஹைட்டி மற்றும் மாலி போன்ற பகுதிகளில் மோதல் போக்கு தொடர்பாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் உண்டாகிய அதீத வெப்பநிலை உயர்வு, அதனால் ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் சுமார் 18 நாடுகள் உணவு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வசிக்கும் 96 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காலநிலை மாற்றத்தால் பசியால் வாடியுள்ளனர்.
பொருளாதாரமும்- அசாதாரண சூழ்நிலையும்:
பணவீக்கம் மற்றும் நாணயமதிப்பு சரிவு போன்ற பொருளாதார சூழ்நிலைகளும் உணவு நெருக்கடியை பொதுமக்கள் சந்திக்க காரணமாக திகழ்ந்துள்ளது. சுமார் 15 நாடுகளில் வாழும் 59.4 மில்லியன் மக்கள் பொருளாதார சூழ்நிலையால் உணவு நெருக்கடியினை சந்தித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்கொண்ட 26 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 38 மில்லியன் என்கிற அறிக்கையின் பகுப்பாய்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போர் மற்றும் இதர அசாதாரண சூழ்நிலையால் கட்டாய இடப்பெயர்வு மேற்கொண்ட காரணத்தினால் 95 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடியை சந்தித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிலும் உணவு நெருக்கடிகள் தொடரக்கூடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
மனிதக்குலத்தின் தோல்வி:
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த அறிக்கை குறித்து கூறுகையில், "காசா மற்றும் சூடான்,ஏமன், மாலி போன்ற பகுதிகளில் மோதல்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படும் பேரழிவு தரும் பசி வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது, வீடுகளை பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். "இது அமைப்புகளின் தோல்வி என்பதை விட மனிதகுலத்தின் தோல்வி. 21 ஆம் நூற்றாண்டில் பசி என்பது தாங்க முடியாதது. வெறும் கைகளாலும், புறமுதுகுகளாலும் வெறும் வயிற்றுக்கு நாம் பதிலளிக்க முடியாது," என தெரிவித்துள்ளார்.
முழுமையான அறிக்கை காண: Global Report on Food Crises 2025 report
LIVE 24 X 7









