அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் சமபலத்துடன் இருந்து வருவதால் கடும்போட்டி நிலவுவதோடு கருத்துக் கணிப்புகளில் இருவருக்கும் 50 – 50 வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றன.
கமலா ஹாரிஸிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு அதிகளவில் இருந்து வருகிறது. மறுபக்கம் டொனால்டு டிரம்பிற்கு முன்னணி உலக பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து டிரம்பிற்கான பிரசார மேடையாக தனது எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிப் பெற்று அதிபரானால், எலான் மஸ்கை அரசின் ஆலோசகராக நியமிப்பது குறித்து பரிசீலனை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்பின் ஆஃபரை தான் ஏற்கத் தயார் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “சேவை செய்ய நான் தயார்” என்று குறிப்பிட்டதோடு, அப்பதிவின் கீழ் DOGE எனப்படும் அரசாங்கத் திறன் துறை வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேடையின் முன் தான் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
https://x.com/elonmusk/status/1825723913051000851
பிசினஸை தாண்டி எலான் மஸ்க் அரசியலுக்குள்ளும் நுழைய உள்ளது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
LIVE 24 X 7









