தமிழ்நாடு

பட்டப்பகலில் துணிகரம்.. திருச்சி காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை!

திருச்சியில் காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே நுழைந்து இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் துணிகரம்.. திருச்சி காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை!
Youth Hacked to Death Inside Trichy Police Quarters
திருச்சியில் உள்ள ஒரு காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே நுழைந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி?

திருச்சி, பீமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 25). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பீமா நகர், மாசிங் பேட்டைப் பகுதியில் இன்று தாமரைச்செல்வன் நின்றிருந்தபோது, அவரைக் கொலை செய்யும் நோக்குடன் ஒரு கும்பல் அவரை விரட்டியிருக்கிறது. அந்த இளைஞர் உயிர் தப்பிக்க முயன்று, அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பின் உள்ளே நுழைந்துள்ளார்.

ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், பாலக்கரை போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து, ஒரு இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.