தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று (ஜனவரி 6) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கின் மையப்பகுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் யாருக்குச் சொந்தம் என்பதில் நிலவிய சர்ச்சையே இந்த வழக்கிற்குக் காரணம். தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகளின் முக்கியப் பார்வை

தீர்ப்பின்போது, தீபத்தூண் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் தான் உள்ளது என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், "தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது," என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும், இந்தச் சிக்கலை மாவட்ட நிர்வாகமே உருவாக்கியிருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

உத்தரவும் தீர்வும்

இதன் மூலம் தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை இல்லை என்பதை உறுதி செய்த அமர்வு, மத்திய தொல்லியல் துறையின் உதவியுடன் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அத்துடன், அரசு மற்றும் தர்கா நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.