டெண்டர் முறைகேடு வழக்கு
முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், ரூ.98 கோடியே 25 லட்சம் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை லஞ்ச ஒழிப்புத் துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றத்தின் கேள்விகள்
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், "மத்திய அரசின் கோரிக்கையின்படி, வழக்கு சம்பந்தமான 12 ஆயிரம் பக்கங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதை மத்திய பணியாளர் நலத் துறை பெற்றுக் கொண்டுள்ளது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி, "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி பெற்றுள்ளீர்கள். ஆனால், மீதமுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? இந்த காலதாமதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அடுத்த தேர்தல் நெருங்கிவிட்டது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. அதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்." என்றார்.
நீதிபதியின் உத்தரவு
பின்னர், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்கக் காலதாமதம் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
LIVE 24 X 7









