கடந்த ஜூலை 21 ஆம் தேதி பிரெசிடென்சி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றபோது, ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக சிநேகப் பிரியா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, மைலாப்பூர் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் தன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பலர் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, வீரலட்சுமி என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, சிநேகப் பிரியாவை விமர்சித்து, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கீழ்த்தரமான விமர்சனங்களைச் செய்துள்ளார் என்று சிநேகப் பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், "இவர் ஒரு தமிழ் பெண் அல்ல; வட இந்தியாவில் இருந்து கள்ள நோக்கத்துடன் வந்தவர்" என்பது போன்ற, முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீரலட்சுமி முன்வைத்ததாகவும், சமூக விரோதப் பேச்சுகள் மூலம் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் சிநேகப் பிரியா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தனது மரியாதைக்கும் நற்பெயருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீரலட்சுமி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க சிநேகப் பிரியா மோகன்தாஸ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
LIVE 24 X 7









