தமிழ்நாடு

"இன்பம் பொங்கட்டும், இணையில்லா வாழ்வு மலரட்டும்"- பொங்கல் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


Political leaders wish Pongal festival
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்.

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; "உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; "பொங்கல்... பொங்கட்டும்! வாழ்க்கை... செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்...! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் திருநாளில், தேனாய், செங்கரும்பாய், திகட்டாது தித்தித்திட...நம் அனைவரின் வாழ்விலும் இன்பம் பொங்கி... மகிழ்ச்சி பெருக இறைவனை வேண்டுகிறேன். தை பிறந்து விட்டது விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வழி பிறக்க இறைவனை வேண்டி, இந்த பொங்கல் திருநாளில் இயற்கையை வணங்கி உழவர்களை கொண்டாடி இந்த தமிழர் திருநாளாம் தை திருநாளை நம் உறவுகளோடும் நண்பர்களோடும் சுற்றத்தார்களோடும் இணைந்து கொண்டாடுவோம். உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்; "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.