தாக்குதலின் பின்னணி
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த +1 படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன், தனது காதலியான 9-ஆம் வகுப்பு மாணவியைச் சந்திக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, மாணவியைப் பெற்றோர்கள் பெரியம்மாவின் வீடான அயனாவரத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியின் அழைப்பை ஏற்று, அந்த மாணவன் பெரியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளான். அப்போது, அங்கு வந்த மாணவியின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர்கள், மாணவனை ஒரு அறையில் அடைத்துக் கொடூரமாகத்த் தாக்கியுள்ளனர்.
கொடூரத் தாக்குதல் மற்றும் புகார்
தாக்குதலின்போது, இரும்பு வளையத்தால் மாணவனின் தலை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஜாதி ரீதியாக அவதூறு பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், மாணவனைப் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சம்பவம் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவன் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது காதலியின் தந்தையும் உறவினர்களும் கடுமையாகத் தாக்கியதுடன், தனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் குறிப்பிட்டிருந்தான்.
புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மாணவியின் தந்தையான முன்னாள் பாஜக வடசென்னை மேற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் சரவணன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய இருவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









