தமிழ்நாடு

தமிழகத்தில் 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்துக்கு அதிரடித் தடை!

அல்மான்ட்’ கிட் எனும் குழந்தைகளுக்கான சளி மருந்தில் நச்சு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி அதன் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்துக்கு அதிரடித் தடை!
Almont Kid Syrup drug banned in Tamil Nadu
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த ஒரு குறிப்பிட்ட இருமல் மருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த மருந்தை விற்பனை செய்யத் தமிழக அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

நச்சுப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டது எப்படி?

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் உள்ள 'ட்ரிடஸ் ரெமிடீஸ்' (Tritus Remedies) நிறுவனத்தின் தயாரிப்பான ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தை கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், மனித உயிருக்கு உலைவைக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ (Ethylene Glycol) என்ற நச்சு வேதிப்பொருள் அந்த மருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

இந்த எத்திலீன் கிளைகோல் கலந்த மருந்தினை உட்கொள்வதால் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் மூளை, நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இது ஒரு உயிருக்கு ஆபத்தான நச்சுப்பொருள் என்பதால், மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்தை தடை செய்யுமாறு அவசரக் கடிதம் அனுப்பியது. ஏற்கனவே தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இத்தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

கண்காணிப்பு மற்றும் புகார் எண்

தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த மருந்தின் விநியோகத்தைத் தடுக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருந்துக் கடைகள் இந்த சிரப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது இது குறித்த சந்தேகங்கள் இருந்தாலோ 94458 65400 என்ற அரசு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.