தமிழ்நாடு

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
High Court orders Tamil Nadu government
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 27, திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு இடையே நடைபெற்ற வாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

விசாரணை தொடங்கியதும், தமிழக அரசுத் தரப்பில், "பொதுக் கூட்டங்கள் நடத்த விதிகள் வகுக்கும் வரை, மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் ரோடு ஷோ செல்லவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ அனுமதியில்லை" என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா, "அரசு கூறுவது அரசியல் கட்சியின் உரிமைகளைப் பறிப்பது ஆகாதா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

விதிகள் வகுக்க அவகாசம் கோரிய அரசு

நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசுத் தரப்பில், "எந்தக் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவத்தில் இருந்து தடுக்கப்படுவதில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், எதன் அடிப்படையில் அத்தகைய உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அரசுத் தரப்பு, "விதிகள் வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசனைகள் செய்து வருகிறோம்" என்று தெரிவித்தது.

தவெக குற்றச்சாட்டு

வழக்கின்போது, தவெக தரப்பில் ஒரு முக்கியக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. "கரூர் பிரசாரத்துக்கு ஒரு நாள் முன்புதான் காவல்துறையினால் அனுமதி வழங்கப்பட்டது. முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்காது" என்று கூறப்பட்டது.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த எத்தனை நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். சில கட்சிகளுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், சில கட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை என்றும் தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் உத்தரவு

வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, நீதிபதி ஸ்ரீவத்ஸவா, "இந்த வழக்கை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்து வழக்கை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.