அரசியல்

பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Ponmudi, Minister M.P. Swaminathan to be appointed Deputy General Secretary
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமித்துத் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய துணைப் பொதுச் செயலாளர்கள்

திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொன்முடியிடமிருந்து துணைப் பொதுச் செயலாளர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் பறிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்

புதிய நியமனங்களைத் தொடர்ந்து, சில மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட மு.பெ. சாமிநாதனுக்குப் பதிலாக, திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இல. பத்மநாபன் வகித்து வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு கே. ஈஸ்வரசாமிக்கு வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டப் பிரிப்பு

வேலூர் தொகுதியை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து வேலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். காட்பாடி, கீழ்வைத்தியணான்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய வேலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக டி.எம். கதிர் ஆனந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாக மாற்றங்கள் வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.