தவறான வழியில் சென்ற வாகனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒன்பது பேர், பில்வாராவுக்கு ஆன்மிகப் பயணம் முடிந்து கடந்த 26 ஆம் தேதி இரவு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, வேன் ஓட்டுநர் கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்கியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, கூகுள் மேப் காட்டிய வழியில், சோமி-உப்ரேடா பாலத்திற்கு வேன் சென்றுள்ளது. அந்தப் பாலம் கடந்த சில மாதங்களாகப் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்பட்டிருந்தது. ஆனால், கூகுள் மேப்பில் அந்தப் பாலம் பயன்பாட்டில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வேன்
பாலம் உடைந்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது. அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சிக்கிக்கொண்டது.
வேனில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறி, வேனின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து கொண்டனர். இதில் ஐந்து பேர் உயிர் பிழைத்தனர். தப்பித்தவர்களில் ஒருவர் தனது உறவினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாகப் போலீசுக்குத் தெரிவித்துள்ளார்.
4 பேர் உயிரிழப்பு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், சந்தா (21), அவரின் மகள் ருத்வி (6), மம்தா (25), அவரின் மகள் குஷி (4) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









