இந்தியா

ரஷ்ய எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஏன் உரிமை இல்லை? ரஷ்ய அதிபர் புதின் கேள்வி!

அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார்.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஏன் உரிமை இல்லை? ரஷ்ய அதிபர் புதின் கேள்வி!
Russian President Vladimir Putin and PM Modi
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா இடையேயான 23-வது மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செய்தியாளர்களுக்குக் கூட்டாகப் பேட்டியளித்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரு நாடுகளும் தோளோடு தோள் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் தடங்கள் குறித்துப் புதின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரதமர் மோடியின் பேச்சு: பயங்கரவாத எதிர்ப்பு

பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று வலியுறுத்தினார். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், "பகல்காம் தாக்குதலாகட்டும் அல்லது குரோக்ஸ் நகரக் கோழைத்தனத் தாக்குதலாகட்டும், அனைத்திற்கும் பயங்கரவாதமே காரணம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடுதோள் நின்று வருகின்றன," என்று உறுதி அளித்தார்.

அதிபர் புதின் உரை: வர்த்தகம் மற்றும் எரிசக்தி

ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், ரஷ்யக் குழுவினருக்கும் இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் அளித்த அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், விருந்தோம்பலுக்காகவும் இரவு விருந்திற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். அணுமின் நிலையத் திட்டங்கள் இந்தியாவின் தொழில்கள் மற்றும் வீடுகளுக்கு மலிவான, சுத்தமான மின்சாரத்தைத் தரும் என்றும், 6 அணு உலைகளில் ஏற்கனவே 2-ல் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அணு உலையை முழு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான பங்களிப்பைத் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா, பெலாரஸில் இருந்து இந்தியப் பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் தொடங்கப்படும் என்றும் புதின் அறிவித்தார். புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட வழித்தடங்களை உருவாக்க இணைந்து செயலாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு இந்தியா - ரஷ்யா வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் இரு தரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ரஷ்யா இடையே சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது வணிக வளர்ச்சிக்கு உதவும் என்றும் புதின் நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.