இந்தியா

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவு.. 15 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட கணவன்!

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவு.. 15 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட கணவன்!
Husband caught after 15 years of hiding after murdering his wife
டெல்லியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் நேற்று குஜராத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரச் சம்பவம்

கடந்த 2010ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாகப் காவக்காலத்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்குச் சென்று அந்த வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, 25 வயதுடைய பெண் ஒருவரின் அழுகிய உடல் தரையில் கிடந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரு போலியான தற்கொலைக் கடிதமும் மீட்கப்பட்டது.

விசாரணை தொடங்கியதில் இருந்தே, அப்பெண்ணின் கணவரான நரோத்தம் பிரசாத் தலைமறைவாக இருந்ததால் அவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது. போலீசார் அவரைத் 'தப்பியோடிய குற்றவாளி' என்று அறிவித்ததுடன், அவரைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10,000 வெகுமதியும் அறிவித்தனர்.

15 ஆண்டுகளுக்கு பின் கைது

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு டெல்லி போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு குழு கடந்த 4 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம் வதோதராவுக்கு அனுப்பப்பட்டது. தொழில் நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூர் மக்களிடம் தகவல்களைச் சேகரித்த பிறகு, மறுநாள் 5 ஆம் தேதி அன்று, வதோதராவுக்கு அருகில் உள்ள சோட்டா உதய்பூர் பகுதியில் நரோத்தம் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகாரைச் சேர்ந்த பிரசாத், தலைமறைவாக இருந்தபோது சோட்டா உதய்பூரில் உள்ள ஒரு பருத்தி ஆலையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

போலீஸ் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நரோத்தம் பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். திருமணமான சிறிது காலத்திலேயே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் அதிகரித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் அவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, போலீசாரைத் திசை திருப்புவதற்காகவே ஒரு போலித் தற்கொலைக் கடிதத்தை எழுதி வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பிரசாத்தைத் தற்போது டெல்லிக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.