இந்தியா

290 வகை உணவுகள்.. அசந்துபோன மருமகன்! ஆந்திர மாமியாரின் 'கமகம' விருந்து!

ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

290 வகை உணவுகள்.. அசந்துபோன மருமகன்! ஆந்திர மாமியாரின் 'கமகம' விருந்து!
290 types of food
ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் - கலாவதி தம்பதியினர், தங்களது மருமகனுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சங்கராந்தி விருந்தை அளிக்கத் திட்டமிட்டனர். கடந்த ஆண்டுதான் இவர்களது மகளுக்குத் திருமணம் முடிந்திருந்தது.

அறை முழுவதும் நிரம்பிய அறுசுவை உணவுகள்

மருமகனுக்காக மாமியார் கலாவதி கைப்பட 290 வகையான உணவுகளைத் தயாரித்துள்ளார். இதில் ஆட்டுக்கறி, கோழி, மீன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமின்றி, விதவிதமான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பாரம்பரிய ஆந்திர உணவுகளும் இடம்பெற்றிருந்தன. இந்த உணவுகள் அனைத்தும் ஒரு பெரிய அறை முழுவதும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கண்ணைக் கட்டி அழைத்து வந்த சர்ப்ரைஸ்

மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பிய குடும்பத்தினர், அவரது கண்ணைத் துணியால் கட்டி அந்த அறைக்குள் அழைத்து வந்தனர். கட்டை அவிழ்த்தவுடன், கண் முன்னே வரிசையாக வைக்கப்பட்டிருந்த 290 வகை உணவுகளைக் கண்ட மருமகன், எதை முதலில் சாப்பிடுவது என்று தெரியாமல் திகைத்துப் போனார்.

ஆந்திராவில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது புதுமாப்பிள்ளைகளுக்கு இதுபோன்று 100-க்கும் மேற்பட்ட உணவுகளைப் பரிமாறிச் சிறப்பிப்பது ஒரு கௌரவமான பாரம்பரியமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பல இடங்களில் இத்தகைய பிரம்மாண்ட விருந்துகள் களைகட்டின.