இந்தியா

மத்திய கிழக்கில் போர்: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் போர்: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?
Will there be a shortage of petrol and diesel in India?
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான 'ஹோர்முஸ் நீரிணையை' (Strait of Hormuz) ஈரான் மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறக்குமதியும் தற்போதைய நிலையும்

இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்தையும் சவூதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது. தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு - அதிகாரிகளின் உறுதி

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று உறுதியளித்துள்ளனர். அதற்கான முக்கிய காரணங்கள், இந்தியாவிடம் தற்போது 10 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. இவை தவிர, அவசர காலத்திற்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள எரிபொருளைக் கொண்டு மேலும் 5 முதல் 7 நாட்கள் வரை சமாளிக்க முடியும்.

மேலும், ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.