சினிமா

தனுஷ் - விக்னேஷ் ராஜா இணையும் புதிய படம்.. தலைப்பு வெளியீடு!

நடிகர் தனுஷின் 54வது படத்தின் பெயரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தனுஷ் - விக்னேஷ் ராஜா இணையும் புதிய படம்.. தலைப்பு வெளியீடு!
Dhanush 54
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் நடிக்கும் 54-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'கர' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த போஸ்டர், தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டலான போஸ்டரும் வசீகரமான வாசகமும்

வெளியாகியுள்ள போஸ்டரில் தனுஷின் கண்கள் கோபத்துடனும், தீவிரம் நிறைந்த பார்வையும் கொண்ட ஒரு நெருக்கமான முகத் தோற்றம் இடம்பெற்றுள்ளது. போஸ்டரின் கீழ் பகுதியில் எரியும் தீப்பிழம்புகளுக்கு நடுவே தனுஷ் தனியாக நிற்பது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், "சில நேரங்களில் ஆபத்தாக இருப்பதே உயிருடன் இருப்பதற்கான ஒரே வழி" (Sometimes staying dangerous is the only way to stay alive) என்ற வாசகம் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு கிரிம் திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சமுதாயத்தில் சந்திக்கும் பல மோசமான மனிதர்களை எதிர்கொள்ள தன்னை வலியவனாக மாற்றிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் கதையாக இது அமையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

'போர் தொழில்' படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களான ஆல்பிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

வெளியீடு மற்றும் ஓடிடி தளம்

இந்தத் திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix) கைப்பற்றியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.