சினிமா

விவாகரத்து கோரி சங்கீதா மனு: நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து கோரி சங்கீதா மனு: நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்கள்!
Vijay and Sangeetha
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 12 பக்கங்கள் கொண்ட விரிவான மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு திருமணமான விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகக் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தனது கணவர் விஜய்யுடன் சுமூகமாகப் பிரிய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகச் சங்கீதா தெரிவித்துள்ளார்.

நடிகையுடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டு

சங்கீதா தனது மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே இருந்த தொடர்பு தனக்குத் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கறிஞர் மூலம் பேசியபோது, அந்தத் தொடர்பைத் துண்டிப்பதாக விஜய் உறுதியளித்ததாகவும், ஆனால் வாக்குறுதியை மீறி அந்த நடிகையுடனான நட்பைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த நடிகையுடன் பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருவதுடன், அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவித் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் மன உளைச்சல்

திருமணத்தை மீறிய இந்த உறவு குறித்துத் தான் தட்டிக் கேட்டபோது, விஜய் தனக்குப் பொருளாதார ரீதியாகப் பல கட்டுப்பாடுகளை விதித்ததாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். 2021-ம் ஆண்டு முதல் பலமுறை வார்த்தைகளால் தன்னை விஜய் அவமானப்படுத்தியதாகவும், இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் எதிர்காலம் கருதியே இதுவரை விவாகரத்து முடிவைத் தள்ளிப் போட்டதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணை மற்றும் ஆதாரங்கள்

விவாகரத்து தொடர்பாக இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியும் விஜய் ஒத்துழைக்கவில்லை என்று சங்கீதா தனது மனுவில் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். "தற்போது அந்த நடிகையின் பெயரைத் தவிர்க்கிறேன், ஆனால் நெருக்கடி ஏற்பட்டால் இருவருக்கும் இடையிலான ஆதாரங்களை வெளியிடுவேன்" என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வழக்கை நீதிமன்றம் தனி அறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு வரும் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.