சூரியின் திரைப்பயணம்
நடிகர் சூரி, சமீப காலமாகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த 'விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி' படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்திருந்தார். இதில் 'கருடன்' மற்றும் 'மாமன்' ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டி வரவேற்பைப் பெற்றன. தற்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், கடற்கரை மீனவ வாழ்க்கையை மையமாகக் கொண்ட 'மண்டாடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தீபாவளிக் கொண்டாட்டமும் கிண்டலும்
இந்நிலையில், நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராஜாக்கூர் மண்ணில் தீபாவளியைக் கூட்டுக் குடும்பமாகக் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், "எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஒரு நபர், சூரியின் பதிவின் கமெண்டில், "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.
சூரியின் வைரல் பதில்
இதையடுத்து, தன்னைக் கிண்டல் செய்தவருக்கு நடிகர் சூரி, எவ்விதக் கோபமும் இன்றிப் பக்குவமான பதிலடி கொடுத்தார்.
"திண்ணையில் இல்லை நண்பா பல நாள்கள், இரவுகள் ரோட்டில் இருந்தவன் நான்… அந்தப் பாதைகள்தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என்று தெரிவித்திருந்தார்.
சூரியின் இந்த நேர்மறை மற்றும் பண்பான வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று, தற்போது வைரலாகி வருகிறது.
திண்ணையில் இல்லை நண்பா 🙏
— Actor Soori (@sooriofficial) October 21, 2025
பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…
அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.
நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் 💐
LIVE 24 X 7









