தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்: வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.

தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்: வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
TVK Cabinet
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.

தமிழகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழக அமைச்சரவையில் தடம் பதித்துள்ளன.

கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் முதற்கட்டமாகப் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (மே 21) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இரண்டாவது கட்ட விரிவாக்கத்தில் 23 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்தத் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட அமைச்சரவை விரிவாக்க விழாவில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் முறைப்படி அமைச்சர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டணி வரலாற்றில் புதிய மைல்கல்

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி அமைக்கத் தொடக்கத்திலிருந்தே ஆதரவளித்து வரும் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள், இதுவரை எந்தவொரு தமிழக அமைச்சரவையிலும் நேரடியாக இடம்பெற்றதில்லை. தற்போதைய விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், இவ்விரு கட்சிகளும் தங்களது அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழக அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாகப் பங்கு பெற்றுள்ளன. இவர்களுக்கான அரசுத் துறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னி அரசுக்கு சமூக நீதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது