தமிழ்நாடு

“Content Material அல்ல... தொலைநோக்கு பார்வை!” - உதயநிதிக்கு மறைமுக பதில் சொன்ன வைகோ?

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“Content Material அல்ல... தொலைநோக்கு பார்வை!” - உதயநிதிக்கு மறைமுக பதில் சொன்ன வைகோ?
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.” என ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.

மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.

மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார். 2031-ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்” என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநர் உரையை Content material உரை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ள நிலையில், வைகோவின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவெக கூட்டணிக்கு மதிமுக தாவுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.