சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள்...ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய்? திடீரென ஒத்திவைக்கப்பட்ட கூட்டம்!

சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள்...ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய்? திடீரென ஒத்திவைக்கப்பட்ட கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Author: Bhavani தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து நேற்றுடன் (நவ.10) ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இன்டர்காண்டினென்டல் சொகுசு விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில் எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் விஜய்யும், மூத்த கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைகளை வழங்குவார்கள் எனத் தெரிகிறது.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, குப்பைகள் அகற்றப்படாதது உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி தொகுதி எம்எல்ஏ ரவிசங்கரிடம் முறையிடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கோரிக்கைகளுடன் வந்த நபரை எம்எல்ஏ ரவிசங்கர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவர்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்ச்சைகளில் சிக்கியுள்ள எம்எல்ஏக்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகையின்போது 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கொலைச் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தக் கூட்டம் முடிந்ததும், முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்துக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது மதியம் 2 மணிக்கு நடைபெறவதாக தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.